Sunday, August 14, 2011

திருமயிலை தெப்போற்சவம்

தை மாத சூல விரதம்


"தை பிறந்தால் வழி பிறக்கும்" என்பார்கள் அறுவடையையை முடித்து நல்ல விளைச்சலுக்கு உதவியாக இருந்த சூரியனுக்கும் மற்றும் மாடுகளுக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக பொங்கல் படைத்து வழிபடும் மாதம். வெள்ளியன்று அம்பாளை வழிபட உகந்த மாதம் . சூரியன் தனது வடக்கு நோக்கிய பயணத்தை துவக்கும் "மகர சங்கராந்தி" என்று அழைக்கப்படும் உத்தராயண காலம் தொடங்கும் மாதம். இந்த தை மாத முழு நிலவன்று தை மாத சூல விரதம் கொண்டாடப்படுகின்றது. இந்த மாதம் பூசம் முழு நிலவுடன் சேர்ந்து வருவதால் தைப்பூசம் மிகவும் சிறப்பு, தமிழகமெங்கும் மட்டுமல்ல, வாழ வந்த இடத்தில் கூட மறக்கவில்லை முருகா, வடிவேலன் துணையில்லாமல் சிறக்கவில்லை முருகா என்று தமிழர்கள் கொண்டாடும் மலேசியாவிலும், சிங்கப்பூரிலும் கூட வெகு சிறப்பாக முருகனுக்கு, காவடிகள், அலகு, அபிஷேகம் என்று மிகவும் கோலாகலமாக நடைபெறும் பண்டிகை தைப்பூசம் ஆகும். இந்த தைப்பௌர்ணமியன்று சிவபெருமானுக்குரிய அஷ்ட மஹா விரதங்களில் ஒன்றான சூல விரதம் அடியார்களால் கடைப்பிடிக்கப்படுகின்றது. இனி இவ்விரதத்தின் பெருமைகளைக் காண்போமா அன்பர்களே?
திருமயிலை கபாலி தீர்த்ததில்


தெப்பம் உலா வரும் காட்சி
சூல விரதத்தை அனுஷ்டிக்கும் முறை: தைப் பூசத்தன்று (முழு நிலவன்று) காலை எழுந்து உடல் சுத்தி செய்து சிவாய நம என்று மந்திரம் ஓதி திருநீறணிந்து மன சுத்தியுடன் திரி சூலத்தை தாங்கியுள்ள அந்த முக்கண் முதல்வனை , நீல கண்டனை, அம்மை சிவகாம சுந்தரி நேசனை, காமனை கண்ணால் எரித்த மஹேஸ்வரனை, மலை மகள், ஓம்காரி, ரீங்காரி அன்னை கௌரியுடன் கூடிய மூர்த்தத்திற்கு அபிஷேகம் செய்து , நைவேத்தியம் செய்து நியமத்துடன் வழிபட்டு, பின் ஆலயம் சென்று வழிபட்டு அந்த ருத்ராக்ஷம் அணிந்த பெருமானின் அடியவர்களுக்கு தட்சணை அளித்து அவர்களுடன் கூடி ஒரு வேளை மட்டும் உணவு உண்டு விரதம் இருக்க வேண்டும்.சூல விரதத்தின் பெருமை: தூய மனதுடன் இந்த விரதத்தை அனுசரிப்பவர்களின் எதிரிகள் அனைவரும் நாசமாக்கப்படுவர், சத்ரு பயம் ஒழியும், கோடிய நோய்கள் நீங்கும், குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிட்டும், சகல மங்களங்களும் உண்டாகும், செல்வம் பெருகும், இந்த இம்மை சுகங்கள் மட்டுமல்லாது, மறுமை சுகமான அந்த அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகனின் திருப்பாதங்களில் சென்று சேவை செய்யும் முக்தியும் சித்தியாகும். மஹாவிஷ்ணு இவ்விரத்ததைக் கடைப்பிடித்து கால நேமி என்னும் கொடிய அரக்கனை சம்ஹாரம் செய்தார். அவரது தலை வலியும் இவ்விரத மகிமையால் விலகியது. பரசுராம அவதாரத்தில் அவரே இந்த விரதத்தை கடைப்பிடித்து ஆயிரம் கரங்கள் கொண்ட கார்த்தவீரியார்ஜுனனை வென்றார். பிரம்ம தேவரும் தனது தீராத வயிற்று வலியை இந்த விரதம் அனுஷ்டித்து தீர்த்துக் கொண்டார்.
சந்திர சேகரர் தெப்போற்சவம்


திருக்கோவில்களில் தைப்பூசம்: சிவபெருமானுக்குரிய "அஷ்ட மஹா விரதங்களில் " ஒன்றானாலும் கூட தற்போது அப்பெருமானின் நெற்றிக் கண்ணிலிருந்து உற்பவித்த பால நேத்ர முருகப்பெருமானுக்கே உரிய சிறப்பான விரதமாக தைப்பூச விழா மிக சிறப்பாக கொண்டாடப்படுகின்றது. குன்று தோறும் குடியிருக்கும் குமரனுக்கு அன்று உண்மையிலேயே கொண்டாட்டம். தமிழகமெங்கும் லட்சக்கணக்கான பக்தர்கள் காவடி சுமந்து கந்தனுக்கு அரோகரா முருகனுக்கு அரோகரா, வேலனுக்கு அரோகரா, வேல் முருகா, வெற்றி வேல் முருகா, என்று ஊனும், உள்ளமும் உருக பாத யாத்திரையாக வந்து முருகனுக்கு அபிஷேகம் செய்து வழிபடும் நாள். பழனி, மருதமலை முதலிய தலங்களில் திருத்தேரோட்டம் நடை பெறும் நாள். எண்கண் தலத்திலே 10 நாள் பிரம்மோற்சவம், தைப்பூசத்தன்று தீர்த்தவாரி , ஆறுமுகப் பெருமானின் சபா அபிஷேகமும் காணக்கிடைக்கும் இன்று. வாடிய பயிரைக் கண்டபோது வாடினேன் என்று ஜ“வ காருண்யத்திற்கு இலக்கணமாக திகழ்ந்த வள்ளலார் அந்த அருட் பெருஞ்ஜோதியுடன் ஜோதியாக கலந்த நாள். வடலூரிலே ஏழு திரை விலக்கி ஜோதி தரிசனம் காணும் நாள். இந்த மானுட வாழ்வின் நோக்கம் அந்த ஜோதி வடிவான இறைவனுடன் நாமும் நமது மலங்களை ஒழித்து ஜோதியாக சேர வேண்டும் என்பதை உணர்த்தும் நாள். திருவிடை மருதூரிலே மஹாலிங்கேஸ்வரர் பத்து நாள் பெருவிழாக் கண்டருளி காவிரியில் தைப்பூசத்தன்று தீர்த்தவாரி கண்டருளுகின்றார்.தெப்பத்தில் சந்திரசேகரர் -1பழனி, குன்றக்குடி, திருப்புடை மருதூர், காஞ்சிபுரம், திருநெல்வேலி, மதுரை, திருப்பரங்குன்றம் முதலிய தலங்களில் தைப்பூச பெருவிழா சிறப்பாக நடைபெறுகின்றது. திருநெல்வேலியிலே தாமிர சபா நடனம் தந்தருளுகின்றார் ஆடல் வல்லான். கருமாரியாக சுயம்புவாக எழுந்தருளி அம்மை அருள் புரியும் திருவேற்காட்டிலே அம்மனுக்கு பிரம்மோற்சவமும், தெப்ப உற்சவமும் தைப்பூசத்தை ஒட்டித்தான் நடைபெறுகின்றது. அங்கயற்கண் அம்மை உடனுறை ஆலவாய் அண்ணல் எழுந்தருளி அருள் பாலிக்கும் மதுரையில் பத்து நாள் உற்சவம் இத்திருவிழாவிலே சொக்க நாதப்பெருமான் வலை வீசி மீன் பிடித்த லீலை, நாட்கதிரறுப்பு விழா முதலியன கண்டருளி தைப்பூசத்தன்று வண்டியூர் எழுந்தருளிப்போற்சவம் கண்டருளுகிறார். திருமயிலையில் கபாலீஸ்வரர் திருக்கோவில், சைதை காரணிஸ்வரர் திருக்கோவில், குன்றக்குடி , திருப்புடை மருதூர்,. முதலிய தலங்களில் தெப்போற்சவம் நடை பெறுகின்றது. வட சென்னையின் பல திருக்கோவில்களின் தெப்போற்சவம் கச்சாலீஸ்வரர் திருக்கோவிலில் நடைபெறுகின்றது. இவ்வாறு பல தலங்களில் தைப்பூசம் மிகச்சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது.


தெப்பத்தில் சந்திரசேகரர் -2

தைப்பௌர்ணமியை ஒட்டி ஏன் தெப்போற்சவம் நடைபெறுகின்றது யோசித்தால் ஒரு உண்மை விளங்கும் விவசாயப்பெருமக்கள் தாங்கள் விளைவித்த நெல்லை அறுவடை செய்து வேலை ஏதும் இல்லாமல் இருப்பர் எனவே அவர்கள் முழு மனதுடன் திருவிழாக்களில் கலந்து கொண்டு தங்கள் சேவைகளை செய்யலாம் அதே சமயம் வெயில் காலம் இன்னும் ஆரம்பமாகவில்லை என்பதால் நீர் நிலைகளிலும் தண்ணீர் நிறைய இருக்கும் என்பதாலும் பௌர்ணமியன்று முழு நிலவு தனது பூரண கலைகளுடன் வெளிச்சம் தரும் என்பதாலும் தெப்போற்சவம் பல் வேறு ஆலயங்களிலும் கொண்டாடப்படுகின்றது. அந்த முக்கண் முதல்வரின் அருளால் அவரது தெப்போற்சவத்தை திருமயிலையிலும், திருக்காரணியிலும் காணும் வாய்ப்பு கிடைத்தது, எனவே இத்திருக்கோவில்களின் தெப்போற்சவத்தை பற்றி ஒரு சிறு குறிப்பு. திருமயிலையில் தைப்பூச தெப்போற்சவம் மூன்று நாட்கள் நடைபெறுகின்றது. சிறப்பு அலங்காரத்துடன் திருக்கோவிலிலிருந்து புறப்பட்டு மாட வீதி வலம் வந்து மேற்கு கரை அடைந்து தெப்போற்சவம் கண்டருளி பின் மாடவீதி வலம் முடித்து திருக்கோவில் திரும்புகின்றனர் சுவாமிகள். முதல் நாள் சந்திர சேகரர் தெப்பம். மிகவும் கலை நயத்துடன் மிதக்கும் தேர் போல் அமைக்கப்பட்டுள்ள தெப்பத்திற்கு பூரண அலங்காரத்துடன் சந்திர சேகரர் அம்பாளுடன் எழிந்தருளுகின்றார். முதல் நாள் மொத்தம் ஐந்து சுற்றுகள் வலம் வருவார் எம்பெருமான். முதல் சுற்று வேத கோஷத்துடனும். இரண்டாம் சுற்று தேவார இன்னிசையுடனும், மூன்றாம் சுற்று நாதஸ்வர இன்னிசையுடனும் நடைபெறுகின்றது. அடுத்த சுற்றுக்களில் வீணையிசையை கேட்டுக்கொண்டே வலம் வந்து அருள் பாலிக்கின்றார் சந்திர சேகரர். அந்த அருமையான காட்சிகளை தாங்கள் இந்தப் பதிவில் காண்கின்றீர்கள்.சந்திரசேகரர் முன்னழகு (அருகாமைக் காட்சி)எம்பெருமான் தெப்பத்த்தில் வலம் வரும் போது பக்தர்கள் கற்பூரம் ஏற்றி வெற்றிலையில் வைத்து மிதக்கவிடுகின்றனர். தெப்பக்குளத்தின் படிகளில் தீபம் ஏற்றி வைக்கின்றனர். படிகள் அனைத்திலும் தீபம் ஜொலிக்கும் அழகே அழகு.


சந்திர சேகர் பின்னழகுதிருமயிலையில் இரண்டாம் நாள் சிங்கார வேலவர் தெப்பம். வள்ளி தெய்வாணையுடன் வளம் கொடுக்கும் முருகர் பூரண அலங்காரத்துடன் தெப்பத்திற்கு எழுந்தருளி தெப்போற்சவம் கண்டருளுகிறார். இன்று ஏழு சுற்றுக்கள் வலம் வருகின்றார். மூன்றாம் நாள் சிங்கார வேலவர் தெப்பம், இன்று கடைசி நாள் என்பதால் பக்தர்கள் மனம் மகிழ எம்பெருமான் முருகர் 9 சுற்றுகள் வருகின்றார்.திருமயிலை மூன்றாம் நாள் தெப்பம்மயில் மீது அமர்ந்த கோலத்தில் சிங்கார வேலவர் அருள் பாலிக்கும் அழகை எப்படி வர்ணிக்க.Labels: , , ,

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home