Saturday, May 10, 2008

கண்ணொளி தந்த ஈசர் -1


திருமயிலை வெள்ளீஸ்வரம்


கண்ணொளி தந்த ஈசர் வெள்ளீஸ்வரர்திருமயிலை, மயிலப்பூர், மயூபுரி என்றெல்லாம் அழைக்கபப்டும் தலத்தில் உள்ள கபாலீஸ்வரர் திருக்கோவிலை அனைவரும் அறிவர், ஆனால் கயிலையே மயிலை எனப்படும் திரும்யிலையில் இன்னும் ஆறு சிவாலயங்கள் உள்ளன என்பதை பலர் அறிய வாய்ப்பில்லை. காணக்கண் கோடி வேண்டும் கபாலியின் பவனி என்று பாபனாசம் சிவன் பாடிய கபாலீஸ்வரர் பவனி வரும் தெற்கு மாட வீதியில் அமைந்துள்ள தலம் தான் வெள்ளீஸ்வரம்.

இத்தலத்தில் கொங்கு விரி கொன்றையொடு கங்கை வளர் திங்களணீ செஞ்சடை எம்பெருமான் சுக்கிரனுக்கு கண்ணொளி வழங்கிய காமாக்ஷி உடனுறைவெள்ளீசராக எழுந்தருளி அருள் பாலிக்கின்றார்.இத்தலத்தின் பெருவிழா வைகாசி பௌர்ணமி நாளை தீர்த்த நாளாகக் கொண்டு பத்து நாள் திருவிழாவாக சிறப்பாகக் கொண்டாடபடுகின்றது. பெருவிழாவின் எட்டாம் நாள் மாலை பிரதோஷ காலத்தில் ஸ்தல ஐதீகமான சுக்கிராச்சாரியாருக்கு சிவ பெருமான் கண்ணொளி வழங்கும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெறுகின்றது. அப்போது ரிஷப வாகனத்தில் பிரதோஷ நாயகராக சிவபெருமானும் கருட வாகனத்தில் உலகளந்த பெருமாளாக மஹா விஷ்ணுவும், பவளக் கால் விமானத்தில் பிரம்மாவும் எழுந்தருளி சுக்கிராச்சாரியாருக்கு அருள் பாலிக்கின்றனர். இந்த அற்புத விழாவின் சிறு துளிகளை அன்பர்களிடம் சேர்க்கும் முயற்சியே இப்பதிவு.


முதல் பதிவில் இத்தலத்தின் ஐதீகமாம் சுக்கிராச்சாரியாருக்கு ஈசன் கண்ணொளி வழங்கிய சரிதத்தைப் பற்றி பார்ப்போம். பிரலாதனை நாம் அனைவரும் அறிவோம் மஹா விஷ்ணு நரசிம்ம அவதாரம் எடுக்க காரணமாக இருந்த பரம பக்தன் அல்லவா அவர். நாராயணா என்னும் நாமத்தை எப்போதும் கை விடாமல் காப்பாற்றியவர் அவர். எனவே தான் எங்கிருக்கிறான் உன் நாராயணன் என்று ஆணவமாக கேட்ட தன் தந்தையிடம் அவர் தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் என்று திட சித்தத்துடன் பதிலளித்த பிரகலாதன் வாக்கை மெய்ப்பிக்க தூணிலிருந்து நரசிம்மமாக வெளிப்பட்டு இரணியனை வதைத்தார். அந்த பிரகலாதனின் பேரன்தான் மஹாபலி சக்ரவர்த்தி.வேதாரண்யம் தலம், ஒரு காலத்தில் வேதங்களே அங்கு காடாக விளங்கியதால் இத்தலத்திற்கு இப்பெயர். அழகு தமிழில் திருமறைக்காடு என்று அழைக்கிறோம். இத்தலத்தில் எம்பருமான் மறைக்காடப்பராகவும், ஹம்ச பாத நடன புவனி விடங்கராகவும் எழுந்தருளி அருள் பாலிக்கின்றார். அத்தலத்தில் ஒரு இரவில் அர்ச்சகர்கள் கருவறையில் எல்லா விளக்குகளையும் அம்ர்த்தி விட்டு ஒரு விளக்கை மட்டும் சிறிதாக எரிய விட்டு விட்டு திருக்காப்பிட்டு விட்டு சென்ற பிறகு, இருளானதால் ஒரு எலி அது வரை தன் வலையில் மறைந்திருந்தது தீப சரத்தின் வழியாக சர சர என்று ஓடி வந்தது இரை தேட. ஓடி வந்த வேகத்தில் அதன் கால் பட்டு விளக்கின் திரி தூண்டி விடப்பட்டது. அறியாமல் செய்தும் கூட திருவிளக்கிட்ட எலிக்கு சிவபெருமான் மகிழ்ந்து வரம் தந்தார். அடுத்த பிறவியில் நீ சக்கரவர்த்தியாய் பிறந்து பேரும் புகழும் அடைவாய் என்று.அந்த எலி அடுத்த பிறவியில் யாராய் பிறந்தது?அசுர குலத்தில் மஹாபலியாகப் பிறந்தது. ஆம் எலி பலி அதாவது மஹாபலியானது.சிவபெருமானின் அருளால் அறுபத்து நான்கு கலைகளிலும் சிறந்து விளங்கிய ம்ஹாபலி பருவம் வந்ததும் அசுர சக்கரவர்த்தியானார். அவர் ஆட்சி மிகவும் செம்மையாக இருந்தது. குடி மக்கள் அனைவரும் மதித்துப் போற்றும் சக்கரவர்த்தியாக விளங்கினார் மஹாபலி .ஒரு சமயம் 1000 அஸ்வமேத யாகம் செய்ய ஆரம்பித்தார் 999 யாகங்கள் முடித்தும் விட்டார். ஆயிரமாவது யாகமும் முடித்து இந்திரனாகும் வாய்ப்புக் கிட்டி விடும் மஹாபலிக்கு.அதாவது
இந்திர பதவிக்கு ஆபத்து வந்து விட்டது..அமராவதி நகரை விட்டு ஓடினான் இந்திரன் வைகுண்டத்திற்க்குபிரபோ! ஆயிரம் நமஸ்காரங்கள்அடியேனை நீங்கள்தான் காக்க வேண்டும் என்று தண்டனிட்டான்,பாம்பனையில் மாயத்துயில் கொண்ட பரமன் வினவினான் ஒன்றும் தெரியாதது போல என்ன விசனம் இந்திரா எதற்காக இப்படி ஓடி வருகின்றார் என்று கள்ளத்தனமாக கேட்டார். வைகுந்த வாசா எனது பதவிக்கு ஆபத்து வந்து விட்டது தாங்கள் தான் எப்படியாவது மஹாபலி அஸ்வமேத யாகம் முடிக்காமல் காத்து அருளவேண்டும் என்று வேண்டி நின்றான்.
மஹா பலி நல்லவனனாலும் அசுர புத்தியினால் தேவர்களை துன்புறுத்தியதால் அவனை அடக்க திருவுளம் கொண்டார் . இந்திரனுக்கு நானே உனக்கு தம்பியாக காஷ்யபருக்கும் அதிதிக்கும் மகனாக உபேந்திரானாக வாமான ரூபத்தில் அவ்தாரம் செய்து மஹாபலியின் கர்வத்தை அடக்குகின்றேன் என்று வரம் அளித்தார்.மிக்க பெரும்புகழ் மாவலி வேள்வியில்
தக்கதிதன் றென்று தானம் விலக்கிய
சுக்கிரன் கண்ணைத் துரும்பாற் கிளறிய
சக்கரக் கையனே! அச்சோவச்சோ சங்கமிடத்தானே! அச்சோவச்சோ
.
இவ்வாறே மூன்று அடி உயர வாமனனாக அவதாரம் செய்த பெருமாள் கையில் குடை பிடித்துக் கொண்டு பிராம்மண சிறுவனாக மஹாபலி யாகம் செய்யும் இடத்திற்கு சென்று பிட்சை கேட்டார். மஹா பலியும் என்ன வேண்டுமோ கேள் என்றான் ஆணவத்துடன், மூன்று அடி மண் போதும் உன்னால் தர முடியுமா? என்றார் பரந்தாமன் மஹாபலியும் ஒத்துக் கொண்டான். உண்மையை உணர்ந்த அசுர குரு சுக்கிராச்சாரியார் மஹாபலியை தடுத்தார் ஆனால் தான் கொடுத்த வாக்கில் இருந்து தவறப்போவதில்லை என்று கூறி தானத்தை தாரை வார்த்துத் தர நீர் இருந்த கமண்டலத்தை எடுத்தான். கமண்டலத்திலிருந்து தண்ணீர் வெளி வராமல் செய்ய சுக்கிராச்சாரியார்( வெள்ளி) வண்டு உருவம் எடுத்து கமண்டலத்தின் உள்ளே சென்று நீர் வரும் பாதையை அடைத்தார். மாயனிடமே வெள்ளியின் மாயம் செல்லுமா ஒரு தர்ப்பையை எடுத்து லேசாக குத்தினார் கபட சூத்ரதாரி. அது சுதர்சன சக்கரமாக சென்று சுக்கிராச்சாரியாரின் கண்ணை தாக்கியது அலறி வெளியே வந்து விழுந்தார் அவர். அதனால் அவரது கண்ணொளி போனது.மஹாபலி தானம் தந்த பின்மாவலி வேள்வியில் மாணுருவாய்ச் சென்று
மூவடி தாவென்று இரந்த விம்மண்ணினை
ஓரடியிட்டு இரண்டாமடி தன்னிலே
தாவ்டியிட்டானாலின்று முற்றும்
தரணி யளந்தானாலின்று முற்றும்
.
என்று பெரியாழ்வார் பாடியபடி , வாமனனாக இருந்த பெருமாள் அம்பர மூடறுத்து ஓங்கி த்ரி விக்ரமானாகி ஒரு அடியால் வானம் முழுவதையும், இரண்டாம் அடியால் பூமி முழுவதையும் அளந்த பின் மூன்றாவது அடிக்காக இடம் எங்கே என்று கேடக அவனது தலையில் கால் வைத்து அவனுக்கு அனுக்கிரகம் செய்த பெருமாள் அவனை பாதாளத்திற்கு அழுத்தி பாதாளத்தின் அரசனாக்கினார்.


காமாக்ஷி அம்மன் பத்மாசனி கோலத்தில்
இனி கண்ணொளி இழந்த சுக்கிராச்சாரியார் என்ன ஆனார் என்று பார்ப்போமா? சிவபெருமான் தானே அசுரர்கள் என்றாலும் அவர்கள் பக்திக்கு மெச்சி வரங்கள் கொடுப்பவர், கயிலை மலையையே தூக்கிய இராவணனுக்கும் வரம் தந்த வள்லல் அல்லவா அவர், மேலும் மஹா சஞ்சீவி மந்திரத்தை உபதேசித்த எனவே அவரை சரணடைய முடிவு செய்தார் சுக்கிராச்சாரியார். கயிலையே மயிலை என்னும் திருப்பதியில் வந்து எல்லாருக்கும் அருளும் பாசுபத விச்சைவரி நச்சரவு கச்சையுடை பேணியழகர், மணிவளர் கண்டர், சாந்தணி மார்பர், ஏறது ஏறியவர், சங்கொளி வண்ணர், சிவபெருமானை நோக்கி தவம் செய்யலானார். ஆம் ஒரு குருந்த மரத்தடியில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து , நியம நிஷ்டையுடன் தவம் செய்து வந்தார். சுக்கிராச்சாரியாரின் தவத்திற்கு மெச்சி பரம கருணாமூர்த்தி, நன்டையார், தீயதிலாதார், நரை வெள்ளேறு ஒன்றுடையார், உமையொரு பாகம் உடையார்,சென்றடையாத திருவுடையார், கயிலைக் குன்றுடையார், சிவ பெருமான் காட்சி தந்து அவருக்கு கண்ணொளி மீண்டும் வழங்கினார் எனவே எம்பருமான் இத்தலத்தில் வெள்ளீஸ்வரர் என்னும் திருநாமம் பெற்றார். இத்தலத்தில் காமாக்ஷி அம்பாள் உடனுறை வெள்ளீஸ்வரரை வணங்குபவர்களின் கண்ணில் உள்ள குறைகளை போக்குகின்றார் வெள்ளீஸ்வரர். இனி வரும் பதிவில் இக்கோவில் அமைப்பைப் பற்றியும் வைகாசிப் பெருவிழாவைப் பற்றியும் காணலாம்.

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home