Sunday, May 25, 2008

கண்ணொளி தந்த ஈசர் -4

சுக்கிரருக்கு கண்ணொளி அளித்தல்
வெள்ளீஸ்வரத்தின் வைகாசிப் பெருவிழாவின் எட்டாம் நாள் மாலை சுக்கிராச்சாரியாருக்கு வெள்ளீசர் கண்ணொளி வழங்கிய நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெறுகின்றது. அன்று மதியம் சுக்கிர பகவானுக்கு திருமுழுக்கு. மாலை திருமயிலை சித்ர குளத்தின் அருகில் மஹாபலியிடம் வாமனனாக எழுந்தருளி பெருமாள் மூன்றடி மண் கேட்கும் நிகழ்ச்சி நடைபெறுகின்றது. வாமனர், மஹா பலி, சுக்கிராச்சாரியார் ஆகியோரும், ரிஷ்ப வாகனத்தில் பிரதோஷ நாயகராக சிவ பெருமானும், உலகளந்த பெருமாளாக கருட வாகனத்தில் மஹா விஷ்ணுவும், பவளக்க்கால் விமானத்தில் பிரம்மாவும் எழுந்தருளுகிறார் . அங்கு வாமனர் கேட்கும் தானத்தை தடுக்க சுக்கிரச்சாரியார் வண்டு வடிவம் எடுத்து கமண்டலத்தில் நீர் வரும் பாதையை அடைத்துக் கொள்ள அதை உணர்ந்த வாமனர் தர்ப்பைப் புல் கொண்டு குத்த சுக்கிராச்சாரியார் கண்ணை இழக்கும் நிகழ்ச்சியும் பின் திரிவிக்ரமனாக உயர்ந்து மூவடியில் ஓரடியில் மண்ணையும், இரண்டாம் அடியில் விண்ணையும் அளந்து உலகளந்த பெருமாளாக கருட வாகனத்தில் பெருமாள் காட்சி தருகின்றார். பின் கண்ணை இழந்த சுக்கிராச்சாரியருக்கு கோவிலின் அருகில் மும்மூர்த்திகளும் அருட்காட்சி தரும் உற்சவம் நடைபெறுகின்றது. அதற்காக வெள்ளீஸ்வரர் பஞ்ச மூர்த்திகளுடன் விமானத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி அருள் பாலிக்கின்றார். பவனியில் முதலில் விநாயக்ப் பெருமான் முன் செல்ல, பின் ஐயனைப் பார்த்தபடி பல்லக்கில் நால்வர் பெருமக்க்ள், சேக்கிழார், ஒட்டக் கூத்தர் எழுந்தருளிகின்றனர், பின்னர் பிரம்மாவும், வாமனர், சுக்கிராச்சாரியார், மஹாபலி ஆகியோர் ஒரு விமானத்திலும் பொழிலளந்த புள்ளூர்தி செல்வனாக உலகளந்த பெருமாளும் , பஞ்ச மூர்த்திகளும் மாட வீதிவலம் வருகின்றனர். ஒரு குட்டி அறுபத்து மூவர் திருவிழா போல சிறப்பாக ந்டைபெறுகின்றது சுக்கிராச்சாரியாருக்கு ஈசர் கண்ணொளி வழங்கிய விழா. இடையில் கபாலீச்சுரம் சென்று கபாலீசரின் பிரதோஷ நடனத்தையும் தரிசித்து வரவும் முடியும். சமயம் கிடைக்கும் போது வெள்ளீஸ்வரம் சென்று கண்ணொளி தந்த ஈசரையும், காமாக்ஷி அம்மனையும் சரபேஸ்வரரையும் தரிசன்ம் செய்து அருள் பெறுங்கள்.


மஹாபலி, சுக்கிரர், வாமனர்


பிரம்மன்


பிரதோஷ நாயகராக சிவபெருமான்


பொழிலளந்த புள்ளூர்தி செல்வராக உலகந்த பெருமாள்






வெள்ளீசர் விமான சேவை


காமாக்ஷி அம்பாள் விமான சேவை



எழில் குமரன் விமான சேவை



சைவ சமய குரவர்கள் நால்வர்

இத்துடன் திருமயிலை வெள்ளீஸ்வரத்தின் பதிவுகள் நிறைவு பெறுகின்றன.

Sunday, May 11, 2008

கண்ணொளி தந்த ஈசர் -3

அதிகார நந்தியில் அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகரின்

அற்புத சேவை




வெள்ளீஸ்வரம் வைகாசிப் பெருவிழா
இனி இத்திருக்கோவிலில் நடைபெறும் வைகாசி பெருந்திருவிழாவைப் பற்றிக் காண்போம். கபாலீச்சுரத்தைப் போலவே இத்தலத்திலும் காலை மாலை இரு வேளைகளிலும் எழுந்தருளி அருள் பாலிப்பவர்கள் பஞ்ச மூர்த்திகளே. இனி சுருக்கமாக பெருவிழா நிகழ்ச்சிகள் பற்றி பார்ப்போம். உற்சவ தொடக்கமாக தீர்த்தாம் பட்தரையில் புற்று மண் எடுக்கும் விழா மாலை சண்டேசுரர் பெரிய மாட விதி புறபாடு அருள்மிகு செல்வ விநாயகர் உற்சவம், முதல் நாள் கொடியேற்று மண்டபத்திற்கு பவளக் கால் விமானத்தில் எழுந்தருளி கொடியேற்றம். இரவு ஸ்தல விரிட்சமாம் குருந்த விருட்சத்தின் அடியில் சுக்கிராச்சாரியார் சிவ பூஜை செய்யும் கோலம். இரண்டாம் நாள் காலை சூரிய வட்டம், மாலை சந்திரப்பிறை, மூன்றாம் நாள் காலை அதிகார நந்தி சேவை, விநாயகர் மூஷிக வாகனத்திலும், ஐயன் அதிகார நந்தியிலும், காமாக்ஷி அம்பாள் கந்தருவி வாகனத்திலும், முருகர் கந்தருவன் வாகனத்திலும், சண்டிகேஸ்வரர் வெள் விடை வாகனத்திலும் எழுந்தருளி அருள் பாலிக்கின்றனர். இரவு பூத வாகனம். நான்காம் நாள் காலை புருஷா மிருக வாகனம், அம்மை நாக வாகனம், முருகர் ஆடு வாகனம். ஐந்தாம் நாள் காலை சவுடல் விமானம் பெருவிழாக்காட்சி, இரவு வெண்விடை பெருவிழாக் காட்சி( ரிஷ்ப வாகனம்). ஆறாம் நாள் காலை பல்லக்கு விழா, இரவு யானை வாகனம், ஏழாம் நாள் திருத்தேரோட்டம். எட்டாம் நாள் மதியம் சுக்கிரபகவான் திருமுழுக்கு, மதியம் சுக்கிர பகவான் கண் பெறுதல், பிரம்மா, விஷ்ணு கருட சேவை இவர்களுடன் வெள்ளீசுவரர் திருக்காட்சியருளல். சந்திரசேகரர் பரிவேட்டை. ஒன்பதாம் நாள் மாலை பிக்ஷ்டாணர் கோல விழா. பத்தாம் நாள் நடராசர் உற்சவம், தீர்த்தவாரி இரவு திருக்கல்யாணப் பெருவிழா. கொடியிறக்கம் சண்டேஸ்வரர் திருவிழா. பதினொன்றாம் நாள் காலை உமாமகேஸ்வரர் விஸ்வரூப தரிசனம், இரவு பந்தம்பறி விழா, பன்னிரண்டாம் நாள் உற்சவ சாந்தி அபிஷேகம் பத்து நாட்கள் விடையாற்றி விழா தொடக்கம், உற்சவ களைப்பு நீங்க இன்னிசை கேட்டு மகிழ்கிறார் வெள்ளீஸ்வரர். இத்திருவிழாவிம் மூன்றாம் நாள் காலை அதிகார நந்தி சேவையின் அருட்காட்சிக்ளை கண்டு களியுங்கள்.



மூஷிக வாகனத்தில் செல்வ விநாயகர்


கந்தர்வி வாகனத்தில் காமாக்ஷி அம்பாள்
வெள்ளீஸ்வரர் அதிகார நந்தி சேவை
கந்தர்வன் வாகனத்தில் முத்துகுமார சுவாமி

கலைமகளையும் அலை மகளையும் கண்களாக் கொண்டு கடாக்ஷிக்கும்

காமாக்ஷி அன்னையிம் எழிற்கோலம் காணக் கண் கோடி வேண்டும்
எழிற் குமரன் தேவியருடன்


சண்டிகேஸ்வரர் ரிஷ்ப வாகன சேவை

அடுத்த பதிவில் மும்மூர்த்திகளிம் தரிசனம் காண்போம்.

கண்ணொளி தந்த ஈசர் -2

வெள்ளீஸ்வரம் திருக்கோவில் மூஷிக வாகனத்தில் செல்வ விநாயகர்

எல்லாம் வல்ல சிவபரம்பொருள் தன்னை மெய்யன்பர்கள் வழிபாடு செய்து உய்யும் பொருட்டு திருக்கோயில் கொண்டெழுந்தருளிய தெய்வத் திருத்தலங்களில் சிறந்ததும், திருத்தொண்டை நாட்டுத்தலங்களில் ஒன்றாகியதும், தெய்வத்திருவள்ளுவர் தோன்றியதும், கண்ணிழ்ந்த சுக்கிரன் திருமயிலை வந்து மீண்டும் கண் ஒளி பெற ஈசுவரனை வழிபட்ட குருந்தவனம் என்னும் வெள்ளீஸ்வரத்தின் கோவில் அமைப்பைப் பற்றி பர்ப்போம்.




திருமயிலை கபாலீஸ்ஸரத்தின் தேற்கு மாட வீதியில், தெற்கு நோக்கிய ஐந்து நிலை இராஜ கோபுரம். இறைவனின் ஸ்தூல சரீரமாக கருதப்படுவதும் கோடி புண்ணியம் கோபுர தர்சனம் க்ண்டு உள்ளே நுழைந்தால் எதிரே முழு முதற் கடவுள் கணபதி சன்னதி. சன்னதியில் ஒரு வித்தியாசம் கண்ணில் படுகின்றது, இரண்டு வினாயகர்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது, செல்வ விநாயகர் தனியாக அமர்ந்த கோலத்திலும், சித்தி புத்திகளுடன் நின்ற கோலத்திலும் இரு விதமாக பிரதிஷ்டை செய்யப்ப்ட்டுள்ளார் முழு முதற் கடவுள் கணபதி. வழக்கமாக கிழக்கு நோக்கியபடி இல்லாமல் தெற்கு நோக்கி உள்ளார் விநாயகர் இத்தலத்தில். த்லையில் கொட்டிக்கொண்டு தோப்புக்க்ரணமிட்டு விகனங்களையெல்லாம் தீர்க்கும் வினாயகர்களை வணங்கி விட்டு அடுத்து ஐயன் சன்னதிக்கு செல்வோம்.

வெள்ளீஸ்வரர் அதிகார நந்தி சேவை


ஐயன் ச்ன்னதியின் முன்னர் துவார பாலகர்கள். அவர்களிடம் அனுமதி பெற்று ஐயனை வணங்குகின்றோம் கிழக்கு நோக்கி திருமுக மண்டலத்துடன் லிங்க ரூபத்தில் அருட்காட்சி கொடுக்கின்றார், சுக்கிராச்சாரியாருக்கு மீண்டும் கண்ணொளி வழங்கிய கருணைக் கடல் ஐந்தலையரவு அரைக்கசைத்த பொன்னார் மேனியர் சிவ பெருமான். ஐயன் முன் நிற்கும் பொது உள்ளம் உவகையால் பொங்குகின்றது. தூய பக்தியொன்றை மட்டுமே பார்த்து அருள் பாலிக்கும் அந்த வேயுறு தோளி பங்கரின் கருணை அப்படியே நம்மை நெகிழ வைக்கின்றது. வாயாற தேவார திருவாசக பதிகாங்கள் பாடி ஈசா, அடியார் நேசா அனைவறையும் காப்பாற்றி ரக்ஷி என்று தெண்டனிட்டு வணங்கி வாருங்கள் பிரகார வலம் வருவோம். சென்னையில் அமைந்துள்ள கோவில் என்பதால் ஒரே ஒரு பிரகாரம். தெற்கு பிரகாரத்தில் நால்வர் பெருமக்கள், பிராம்மி, மஹேஸ்வரி, கௌமாரி, வைஷ்ணவி, இந்திராணி, வாராகி, ஆகிய சப்த மாதர்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளனர். அந்த சக்திகளை வணங்கி வலப்புறம் திரும்பினால் வீரபத்ரர், நாகர், உண்ணாமுலையம்மன், அண்ணாமலையார், சரஸ்வதி, லக்ஷ்மி, மற்றும் சுக்கிராச்சாரியாரின் கண்ணைத் துரும்பால் கிளறிய உலகளந்த பெருமாள், அவர்களை வணங்கி விட்டு திரும்பினால் முருகர் சன்னதி.
கந்தருவி வாகனத்தில் காமாக்ஷி அம்பாள்


தன் தேவியர் இருவருடன் வேல் ஏந்தி அருட்கோலம் காட்டுகின்றார் முத்துகுமார சுவாமி. . அழகன் முருகனின் சன்ன்தியின் எதிரே புதிதாக பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள தங்கக் கொடி மரம் அப்படியே மின்னுகின்றது. எழில் குமரனின் சன்னதிக்கு வலப்புறம் பஞ்ச மூர்த்ஹ்திகள் உற்சவர்களாக எழுந்தருளி அருள் பாலிக்கின்றனர், பெருவிழாக்காலங்களில் வீதி உலா வ்ந்து அருள் புரியும் உற்சவ திருமூர்த்த்களை தரிசித்த பின் அம்மன் ச்ன்னதி செல்வத்ற்கு முன் ஐயன் கருவறையில் உள்ள கோஷ்டங்களில் தெற்கு நோக்கி விநாயகரும், தக்ஷிணா மூர்த்தியும், மேற்கு நோக்கி லிங்கோத்பவரும், வடக்கு நோக்கி பிரம்மாவும், துர்க்கையும் அமைந்துள்ள எழிலையும், கோஷ்டங்களில் ம்னித முகங்கள் அமைக்கப்படுள்ள பாங்கையும் கண்டு களிக்கலாம்.


கந்தருவன் வாகனத்தில் முருகர்


அம்மன் சன்னதி தெற்கு நோக்கி அமைந்துள்ளது. மந்த்காச புன்னகையுடன், லக்ஷ்மி, சரஸ்வதி ஆகிய இருவரையும் கண்களாகக் கொண்ட அம்பாள் கருணையுடன் நம்மை நோக்கி, அங்குசம், பாசம், அபய, வரத கரங்களுடன் நின்ற காலத்தில் எழிலாக அருட்காட்சி தருகின்றாள் காமாக்ஷி அம்பாள். காஞ்சி காம கோடி கருணா விலாசினி இங்கே சென்னையில் நமக்காக எழுந்தருளி அருள் பாலிக்கின்றாள். ஜகன்மாதா, அன்னபூரணி, ஜகத் ஜனனி அம்பிகையை அபிராமி அந்தாதி பாடி வணங்கி வலம் வந்தால் மற்ற உற்சவ மூர்த்தங்களை தரிசிக்கலாம், ஆடல் வல்லானின் பனித்த சடையில் சந்திரப்பிறை அழகு என்றால், சுந்தர பிக்ஷ்டாணர் மூர்த்த்தில் மான் அழகு பின்னம் கால்களில் நின்று முன்னங்கால்களை மடக்கி நின்ற கோலத்தில், முனி பத்தினிகள் பார்த்து மயங்கிய அந்த சுந்தர வதனத்தை தரிசிக்கும் வகையாக சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது. மேலும் உலகளந்த பெருமாள், வாமனர், ஆறுமுகர், நால்வர் பெருமக்கள், சுக்கிராச்சாரியார், மஹாபலி, சேக்கிழார், ஒட்டக்கூத்தர் ஆகியோரின் மூர்த்தங்களும் உள்ளன. அடுத்து தெற்கு நோக்கிய அம்பலம் அதில் ஆனந்த நதம் புரியும் அம்பல வாணர் அருட்காட்சி அம்மை சிவகாமியும் உடன் அருள் பாலிக்க்கின்றாள்.
மஹா திரிபுர சுந்தரி


காமாக்ஷி அம்பாள்


பின் வெளியே வந்தால் சுக்கிரேஸ்வரர் மற்றும் சரபேஸ்வரர் சன்னதி. சுக்கிரேஸ்வரர் சன்னதியில் இத்தல ஐதீகமான குருந்த மரத்தடியில் சுக்கிராச்சாரியார் சிவ பூஜை செய்யும் கோலத்தை காணலாம் . சமீபத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்ட சரபேஸ்வரின் சன்னதியில் ராகு காலங்களில் பக்தர்கள் குவிகின்றனர். சரபர் மனிதன், யாளி,பக்ஷி மூன்றும் கலந்த உருவம். பிரகலாதனுக்காக நரசிம்ம அவதாரம் எடுத்த பெருமாள் இரணியனை வதம் செய்த பின்னரும் உக்ரம் அடங்காமல் சுற்றி வந்ததால் அவரது உக்ரத்தை அடக்கி சாந்தப்படுத்த சிவபெருமான் எடுத்த உருவமே சரபேஸ்வரர். சூரியன் சந்திரன் அக்னி ஆகிய மூன்று கண்களும், நகங்கள் வஜ்ராயுதம் போலவும், வடவாமுகாக்னி, பைரவை இவர்களை தன் வயிற்றில் ஜடாக்னியாக அடக்கி, மான், மழு, பாம்பு, அக்னி, திருக்கரங்களில் தாங்கி, யாளி முகத்துடனும். பிரத்தியங்கிரா, சூலினி துர்க்கை ஆகியோரை இறக்கைகளாகக் கொண்டு, ரோக தேவதைகளையும், யமனையும் தொடைகளாகக் கொண்டு, சிரசில் பிறை, கங்கை விளங்க எட்டுக்கால்கள், நான்கு கைகள், கருடனைப்போன்ற அலகு, சிங்க வால், தெற்றுப்பல, காலில் நரசிம்மரை சாந்திப்படுத்தும் கோலத்துடன் கம்பீரமாக கற்பனையிலும் நினைக்க முடியாத உருவுடன் எழுந்தருளி அருள் பாலிக்கின்றார் சரபேஸ்வரர். தடைகள் மன்க்கலக்கம். வியாதிகள் ஆகியவற்றை களைந்து எதிர்களே இல்லாத அருளைத்தரும் சத்ரு நாசகர் ஸ்ரீ சரபேஸ்வ்ரர். இராகு காலத்தில் இவரை வழிபட்டால் ஏவல். பில்லி, சூனியம், தீராத ம்னோ வியாதி, தேவை இல்லாத பயம் தீராத நோய்கள். வறுமை, நம்மை ஆட்டிப்படைக்கும் கண்ணிற்கு தெரியாத துஷ்ட தீய சக்திகள் போன்றவைகள் நீங்கும்.பேதமற்ற மூர்த்தியான இவரை வணங்குவதால் இயற்கையால் ஏற்படும் ஆபத்துக்கள் (புயல், இடி, மின்னல்) பாதிக்காது. ஞாயிற்றுக்க்கிழமைகளில் இராகு காலத்தில் சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெறுகின்றன இவருக்கு.



திருத்தேரில் வெள்ளீஸ்வரர்





அடுத்து கொடிமரம் மற்றும் பலி பீடம், கொடிமரத்திற்கு வலப்புறம் கொடியேற்று மண்டபம். இங்கு அலங்கார மண்டபம் மற்றும் நவக்கிரக சன்னதியும் அமைந்துள்ளது.



வெண் விடையில் சண்டிகேஸ்வரர்

அடுத்த பதிவில் வைகாசி பெருவிழாவைப் பற்றி காண்போம்.

Saturday, May 10, 2008

கண்ணொளி தந்த ஈசர் -1


திருமயிலை வெள்ளீஸ்வரம்


கண்ணொளி தந்த ஈசர் வெள்ளீஸ்வரர்



திருமயிலை, மயிலப்பூர், மயூபுரி என்றெல்லாம் அழைக்கபப்டும் தலத்தில் உள்ள கபாலீஸ்வரர் திருக்கோவிலை அனைவரும் அறிவர், ஆனால் கயிலையே மயிலை எனப்படும் திரும்யிலையில் இன்னும் ஆறு சிவாலயங்கள் உள்ளன என்பதை பலர் அறிய வாய்ப்பில்லை. காணக்கண் கோடி வேண்டும் கபாலியின் பவனி என்று பாபனாசம் சிவன் பாடிய கபாலீஸ்வரர் பவனி வரும் தெற்கு மாட வீதியில் அமைந்துள்ள தலம் தான் வெள்ளீஸ்வரம்.





இத்தலத்தில் கொங்கு விரி கொன்றையொடு கங்கை வளர் திங்களணீ செஞ்சடை எம்பெருமான் சுக்கிரனுக்கு கண்ணொளி வழங்கிய காமாக்ஷி உடனுறைவெள்ளீசராக எழுந்தருளி அருள் பாலிக்கின்றார்.



இத்தலத்தின் பெருவிழா வைகாசி பௌர்ணமி நாளை தீர்த்த நாளாகக் கொண்டு பத்து நாள் திருவிழாவாக சிறப்பாகக் கொண்டாடபடுகின்றது. பெருவிழாவின் எட்டாம் நாள் மாலை பிரதோஷ காலத்தில் ஸ்தல ஐதீகமான சுக்கிராச்சாரியாருக்கு சிவ பெருமான் கண்ணொளி வழங்கும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெறுகின்றது. அப்போது ரிஷப வாகனத்தில் பிரதோஷ நாயகராக சிவபெருமானும் கருட வாகனத்தில் உலகளந்த பெருமாளாக மஹா விஷ்ணுவும், பவளக் கால் விமானத்தில் பிரம்மாவும் எழுந்தருளி சுக்கிராச்சாரியாருக்கு அருள் பாலிக்கின்றனர். இந்த அற்புத விழாவின் சிறு துளிகளை அன்பர்களிடம் சேர்க்கும் முயற்சியே இப்பதிவு.


முதல் பதிவில் இத்தலத்தின் ஐதீகமாம் சுக்கிராச்சாரியாருக்கு ஈசன் கண்ணொளி வழங்கிய சரிதத்தைப் பற்றி பார்ப்போம். பிரலாதனை நாம் அனைவரும் அறிவோம் மஹா விஷ்ணு நரசிம்ம அவதாரம் எடுக்க காரணமாக இருந்த பரம பக்தன் அல்லவா அவர். நாராயணா என்னும் நாமத்தை எப்போதும் கை விடாமல் காப்பாற்றியவர் அவர். எனவே தான் எங்கிருக்கிறான் உன் நாராயணன் என்று ஆணவமாக கேட்ட தன் தந்தையிடம் அவர் தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் என்று திட சித்தத்துடன் பதிலளித்த பிரகலாதன் வாக்கை மெய்ப்பிக்க தூணிலிருந்து நரசிம்மமாக வெளிப்பட்டு இரணியனை வதைத்தார். அந்த பிரகலாதனின் பேரன்தான் மஹாபலி சக்ரவர்த்தி.



வேதாரண்யம் தலம், ஒரு காலத்தில் வேதங்களே அங்கு காடாக விளங்கியதால் இத்தலத்திற்கு இப்பெயர். அழகு தமிழில் திருமறைக்காடு என்று அழைக்கிறோம். இத்தலத்தில் எம்பருமான் மறைக்காடப்பராகவும், ஹம்ச பாத நடன புவனி விடங்கராகவும் எழுந்தருளி அருள் பாலிக்கின்றார். அத்தலத்தில் ஒரு இரவில் அர்ச்சகர்கள் கருவறையில் எல்லா விளக்குகளையும் அம்ர்த்தி விட்டு ஒரு விளக்கை மட்டும் சிறிதாக எரிய விட்டு விட்டு திருக்காப்பிட்டு விட்டு சென்ற பிறகு, இருளானதால் ஒரு எலி அது வரை தன் வலையில் மறைந்திருந்தது தீப சரத்தின் வழியாக சர சர என்று ஓடி வந்தது இரை தேட. ஓடி வந்த வேகத்தில் அதன் கால் பட்டு விளக்கின் திரி தூண்டி விடப்பட்டது. அறியாமல் செய்தும் கூட திருவிளக்கிட்ட எலிக்கு சிவபெருமான் மகிழ்ந்து வரம் தந்தார். அடுத்த பிறவியில் நீ சக்கரவர்த்தியாய் பிறந்து பேரும் புகழும் அடைவாய் என்று.



அந்த எலி அடுத்த பிறவியில் யாராய் பிறந்தது?



அசுர குலத்தில் மஹாபலியாகப் பிறந்தது. ஆம் எலி பலி அதாவது மஹாபலியானது.



சிவபெருமானின் அருளால் அறுபத்து நான்கு கலைகளிலும் சிறந்து விளங்கிய ம்ஹாபலி பருவம் வந்ததும் அசுர சக்கரவர்த்தியானார். அவர் ஆட்சி மிகவும் செம்மையாக இருந்தது. குடி மக்கள் அனைவரும் மதித்துப் போற்றும் சக்கரவர்த்தியாக விளங்கினார் மஹாபலி .ஒரு சமயம் 1000 அஸ்வமேத யாகம் செய்ய ஆரம்பித்தார் 999 யாகங்கள் முடித்தும் விட்டார். ஆயிரமாவது யாகமும் முடித்து இந்திரனாகும் வாய்ப்புக் கிட்டி விடும் மஹாபலிக்கு.



அதாவது
இந்திர பதவிக்கு ஆபத்து வந்து விட்டது..



அமராவதி நகரை விட்டு ஓடினான் இந்திரன் வைகுண்டத்திற்க்கு



பிரபோ! ஆயிரம் நமஸ்காரங்கள்



அடியேனை நீங்கள்தான் காக்க வேண்டும் என்று தண்டனிட்டான்,



பாம்பனையில் மாயத்துயில் கொண்ட பரமன் வினவினான் ஒன்றும் தெரியாதது போல என்ன விசனம் இந்திரா எதற்காக இப்படி ஓடி வருகின்றார் என்று கள்ளத்தனமாக கேட்டார். வைகுந்த வாசா எனது பதவிக்கு ஆபத்து வந்து விட்டது தாங்கள் தான் எப்படியாவது மஹாபலி அஸ்வமேத யாகம் முடிக்காமல் காத்து அருளவேண்டும் என்று வேண்டி நின்றான்.




மஹா பலி நல்லவனனாலும் அசுர புத்தியினால் தேவர்களை துன்புறுத்தியதால் அவனை அடக்க திருவுளம் கொண்டார் . இந்திரனுக்கு நானே உனக்கு தம்பியாக காஷ்யபருக்கும் அதிதிக்கும் மகனாக உபேந்திரானாக வாமான ரூபத்தில் அவ்தாரம் செய்து மஹாபலியின் கர்வத்தை அடக்குகின்றேன் என்று வரம் அளித்தார்.



மிக்க பெரும்புகழ் மாவலி வேள்வியில்
தக்கதிதன் றென்று தானம் விலக்கிய
சுக்கிரன் கண்ணைத் துரும்பாற் கிளறிய
சக்கரக் கையனே! அச்சோவச்சோ சங்கமிடத்தானே! அச்சோவச்சோ
.
இவ்வாறே மூன்று அடி உயர வாமனனாக அவதாரம் செய்த பெருமாள் கையில் குடை பிடித்துக் கொண்டு பிராம்மண சிறுவனாக மஹாபலி யாகம் செய்யும் இடத்திற்கு சென்று பிட்சை கேட்டார். மஹா பலியும் என்ன வேண்டுமோ கேள் என்றான் ஆணவத்துடன், மூன்று அடி மண் போதும் உன்னால் தர முடியுமா? என்றார் பரந்தாமன் மஹாபலியும் ஒத்துக் கொண்டான். உண்மையை உணர்ந்த அசுர குரு சுக்கிராச்சாரியார் மஹாபலியை தடுத்தார் ஆனால் தான் கொடுத்த வாக்கில் இருந்து தவறப்போவதில்லை என்று கூறி தானத்தை தாரை வார்த்துத் தர நீர் இருந்த கமண்டலத்தை எடுத்தான். கமண்டலத்திலிருந்து தண்ணீர் வெளி வராமல் செய்ய சுக்கிராச்சாரியார்( வெள்ளி) வண்டு உருவம் எடுத்து கமண்டலத்தின் உள்ளே சென்று நீர் வரும் பாதையை அடைத்தார். மாயனிடமே வெள்ளியின் மாயம் செல்லுமா ஒரு தர்ப்பையை எடுத்து லேசாக குத்தினார் கபட சூத்ரதாரி. அது சுதர்சன சக்கரமாக சென்று சுக்கிராச்சாரியாரின் கண்ணை தாக்கியது அலறி வெளியே வந்து விழுந்தார் அவர். அதனால் அவரது கண்ணொளி போனது.



மஹாபலி தானம் தந்த பின்



மாவலி வேள்வியில் மாணுருவாய்ச் சென்று
மூவடி தாவென்று இரந்த விம்மண்ணினை
ஓரடியிட்டு இரண்டாமடி தன்னிலே
தாவ்டியிட்டானாலின்று முற்றும்
தரணி யளந்தானாலின்று முற்றும்
.
என்று பெரியாழ்வார் பாடியபடி , வாமனனாக இருந்த பெருமாள் அம்பர மூடறுத்து ஓங்கி த்ரி விக்ரமானாகி ஒரு அடியால் வானம் முழுவதையும், இரண்டாம் அடியால் பூமி முழுவதையும் அளந்த பின் மூன்றாவது அடிக்காக இடம் எங்கே என்று கேடக அவனது தலையில் கால் வைத்து அவனுக்கு அனுக்கிரகம் செய்த பெருமாள் அவனை பாதாளத்திற்கு அழுத்தி பாதாளத்தின் அரசனாக்கினார்.


காமாக்ஷி அம்மன் பத்மாசனி கோலத்தில்




இனி கண்ணொளி இழந்த சுக்கிராச்சாரியார் என்ன ஆனார் என்று பார்ப்போமா? சிவபெருமான் தானே அசுரர்கள் என்றாலும் அவர்கள் பக்திக்கு மெச்சி வரங்கள் கொடுப்பவர், கயிலை மலையையே தூக்கிய இராவணனுக்கும் வரம் தந்த வள்லல் அல்லவா அவர், மேலும் மஹா சஞ்சீவி மந்திரத்தை உபதேசித்த எனவே அவரை சரணடைய முடிவு செய்தார் சுக்கிராச்சாரியார். கயிலையே மயிலை என்னும் திருப்பதியில் வந்து எல்லாருக்கும் அருளும் பாசுபத விச்சைவரி நச்சரவு கச்சையுடை பேணியழகர், மணிவளர் கண்டர், சாந்தணி மார்பர், ஏறது ஏறியவர், சங்கொளி வண்ணர், சிவபெருமானை நோக்கி தவம் செய்யலானார். ஆம் ஒரு குருந்த மரத்தடியில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து , நியம நிஷ்டையுடன் தவம் செய்து வந்தார். சுக்கிராச்சாரியாரின் தவத்திற்கு மெச்சி பரம கருணாமூர்த்தி, நன்டையார், தீயதிலாதார், நரை வெள்ளேறு ஒன்றுடையார், உமையொரு பாகம் உடையார்,சென்றடையாத திருவுடையார், கயிலைக் குன்றுடையார், சிவ பெருமான் காட்சி தந்து அவருக்கு கண்ணொளி மீண்டும் வழங்கினார் எனவே எம்பருமான் இத்தலத்தில் வெள்ளீஸ்வரர் என்னும் திருநாமம் பெற்றார். இத்தலத்தில் காமாக்ஷி அம்பாள் உடனுறை வெள்ளீஸ்வரரை வணங்குபவர்களின் கண்ணில் உள்ள குறைகளை போக்குகின்றார் வெள்ளீஸ்வரர். இனி வரும் பதிவில் இக்கோவில் அமைப்பைப் பற்றியும் வைகாசிப் பெருவிழாவைப் பற்றியும் காணலாம்.